| இசைவுத்தீர்ப்பு தீர்வத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் தீர்ப்புக்கடனாளியை கைது செய்ய முடியாது (Judgment Debtor Cannot Be Arrested In Proceedings For Execution Of Arbitration Award): கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

Posted by Admin March 29, 2023

நிறைவேற்று நடவடிக்கை ஒன்றில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை ஆணையாளரை கைது செய்யும்படி பெங்களூரு வணிக நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை 'சட்டத்திற்கு முரணானது' என்று கூறி, கர்நாடக உயர் நீதிமன்றம் இரத்து செய்தது.

இசைவுதீர்ப்பு நடவடிக்கையில் பிறப்பிக்கப்பட்ட தீர்வத்தை (Award) நிறைவேற்றுவதற்காக தீர்வம் பெற்ற தேஜேஸ்கோ டெக்ஸாப்ட் என்ற தனியார் நிறுவனம் உரிமையியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 60-இன் கீழ் நிறைவேற்று மனு தாக்கல் செய்து தீர்ப்புக் கடனாளிகளான மேற்படி அரசு முதன்மை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை ஆணையாளர் அலுவலகத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பற்றுகை செய்யக் கோரியது.

ஆனால் மேற்படி தீர்வம் தனது இறுதிநிலையை எட்டி நிலைபெற்று விட்டதாலும், தீர்வத்தொகை செலுத்தப்பெறுவதில் மேலும் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும், தீர்ப்புக்கடனாளிகளான மேற்படி அரசு அலுவலர்களை கைது செய்வதற்கு பெங்களூரு வணிக நீதிமன்றம் உரிமையியல் நடைமுறைச்சட்டம் கட்டளை XXI விதி 30-இன் கீழ் ஆணை பிறப்பித்து விட்டது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவில் பதிவுருக்களை பரிசீலனை செய்த கர்நாடகா உயர் நீதிமன்றம், தீர்ப்புக்கடனாளிகளான அரசு அலுவலர்களை கைது செய்யக்கோரி மேற்படி தனியார் நிறுவனத்தினர் மனு செய்யவில்லை என்பதையும், அது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பற்றுகை செய்ய மட்டுமே மனுவில் கோரியுள்ளது என்பதையும் அவதானித்தது.

கோராத பரிகாரத்தை எவ்வாறு வணிக நீதிமன்றம் வழங்கியது என்று உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், தீர்ப்புக்கடனாளிகளை கைது செய்ய ஆணையிட்டால் தீர்வத்தொகை செலுத்தப்பட்டு விடும் என்று வாய்மொழியாக செய்யப்பட்ட விண்ணப்பத்தை வணிக நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொண்டு அவ்வாறு ஆணை பிறப்பித்தது என்றும், அவ்வாறு வாய்மொழியாக விண்ணப்பிக்கவும் அதன் பேரில் கைதுக்கு ஆணையிடவும் உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை XXI விதி 11 வகை செய்கின்றது என்றும் மேற்படி தனியார் நிறுவனம் தரப்பில் தோன்றிய வழக்குரைஞர் விளக்கமளித்து வாதிட்டார்.

ஆனால் இந்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. வாய்மொழி விண்ணப்பத்தின் பேரில் தீர்ப்பாணையின் உடனடி நிறைவேற்றத்திற்காக தீர்ப்புக் கடனாளியை கைது செய்ய ஆணையிட வேண்டுமெனில், தீர்ப்பாணை பகரப்படும் சமயத்தில் அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையெனில் கைதுக்கான வாய்மொழி விண்ணப்பத்தை பரிசீலனைக்கு நீதிமன்றம் ஏற்க இயலாது என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

உயர் நீதிமன்றம் மேலும் கூறுகையில், "இந்த நிறைவேற்று மனுவில் நிறைவேற்றக் கோரப்படுவது இசைவுத்தீர்ப்பாளர் பிறப்பித்த ஒரு தீர்வம்தானே தவிர, நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்ட்ட தீர்ப்பாணை (Decree) அல்ல என்றும், எனவே உரிமையியல் நடைமுறை சட்டத்தின் கட்டளை XXI விதி 11 இதற்கு சற்றும் பொருந்தாது என்றும்"குறிப்பிட்டது. அது தொடர்ந்து குறிப்பிடுகையில், தீர்ப்புக்கடனாளிகளை உரிமையியல் சிறையில் அடைக்க கட்டளை XXI விதி 30 வகை செய்கின்றது என்றும், அவர்களை கைது செய்வதற்குண்டான நடைமுறைகளை கட்டளை XXI -இன் கீழான 37 முதல் 40 வரையிலான விதிகள் வகுத்துள்ளன என்றும் தெளிவுபடுத்தியது.

முடிவில் உயர் நீதிமன்றம் கூறுகையில், இந்த வழக்கில் தீர்ப்புக்கடனாளிகளாக உள்ளவர்கள் அரசாங்கத்தின் அலுவலர்கள் என்றும், அவர்களுக்கு கைது அறிவிப்பை வழங்காமல் அவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பித்துள்ளதை ஏற்க இயலாது என்றும் நிலைநிறுத்தி, தீர்ப்புக்கடனாளிகள் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவை அனுமதித்து ஆணையிட்டது; வணிக நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணை இரத்து.

 

Case Title:
The Principal Secretary & Anr. And Tejasco Techsoft Private Limited
Case NO: Writ Petition No. 4525 OF 2023
Date of Order: 07-03-2023

Appearance:

AGA C.N.Mahadeshwaran, for Petitioner.
H.Sunilkumar, Advocate for Respondent.