ஏற்காடு மலை வாழ் மக்களுக்கு மளிகைப் பொருட்கள் விநியோகம்; சட்டப்பணிகள் ஆணைக்குழு வழங்கியது.

Posted by Admin May 02, 2020

கொரோனா தொற்று காரணமாக ஏற்காடு மலைவாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை அடங்கிய பைகளை சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விநியோகம் செய்தது.

சேலம் மாவட்டத்தில் அமைத்துள்ளது ஏற்காடு மலைப்பகுதி. சுற்றுலாத்தலமான ஏற்காட்டுக்கு கொரோனா பீதி மற்றும் ஊரடங்கு காரணமாக யாரும் போகவோ, வரவோ அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்தி வந்த பலரின் வாழ்க்கை சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாண்பமை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியுமான திரு குமரகுரு தலைமையில், மாவட்ட குடும்ப நீதிபதி திருமதி பத்மா, மாண்பமை சார்பு நீதிபதிகள் திருவாளர்கள் சண்முகம் மற்றும் இராதாகிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு செந்திகுமார் ஆகியோர் இணைந்து அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை அடங்கிய தொகுப்பு பைகளை ஏற்காடு மலைவாழ் மக்கள், ஏழைஎளியவர்கள், வேலையின்றி தவிப்போர், முதியவர்கள் என சுமார் 100 பேருக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் விநியோகம் செய்தனர்.

அச்சமயத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு உமாசங்கர், வட்டாட்சியர் திரு ரமணி, ஏற்காடு காவல் ஆய்வாளர் திரு ஆனந்தன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஏற்காடு பகுதி தன்னார்வலர் திரு அர்ஜுனன் ஒருங்கிணைப்பு செய்தார்.