வெல்லுந்திசையை நோக்கி....

Posted by Admin May 04, 2020

நாளும் வணங்குமென் கோவிலுக்கு, நாற்பது
நாட்கள் விரதமிருந்து பக்தியுடன் சென்றேன்.
கலைவாணியின் சிலை யில்லா அக்கோவிலில்
செய்யும் தொழிலே தெய்வம்;

வருகையாளர்கள் வாரா வரவேற்புக்கூடம், என்
வருகை கண்டு வாரிச்சுருட்டி வணங்கியது.
மாசில்லாமல் உலகு ஆனாலும், பலநாள்
தூசு பலகையில் படிந்திருந்தது;

அலுவல்க தொட்டிப்பூட்டைத் தொட்டவுடன், அது
ஆவல் பொங்க 'வாங்கய்யா... ' என்றது;
திறக்கையில் வந்த கீச்சுச்சத்தம், சாவியிடம்
பூட்டு நலம் விசாரிப்பதாகத்தோன்றியது.

தொற்று நீக்க திரவங்களுடன் வந்தவர்
சற்றும் தாமதிக்காமல் பணியில் இறங்க,
போட்டது போட்டபடி பூட்டிச்சென்ற அலுவலகம்
மெல்ல மெல்லப்பொலிவு பெறத்தொடங்கியது.

ஆய்வுக்கு உதவும் என் தோழி,
உலகைக் காட்ட என் காதலி,
கட்டுப்பட்டு நடக்கவென் மனைவி, என
எல்லாமே என் கணினிதான்.

முடங்கிப் போயிருந்த முப்பெரும் கணினிகளையும்
முடுக்க முப்பது நிமிடங்கள்; விசைப்பலகையில்
கை வைத்து செல்லுந்திசை நோக்க
வெல்லுமென் அலுவலகம் தொடங்கியது.