கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது உலக திருக்குறள் மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்தேன். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. அப்படியே அங்கிருக்கும் புகழ்பெற்ற கோவில்களுக்கு எல்லாம் சென்று தரிசனம் செய்து விட்டு நிறைவாக கொழும்பு வந்தடைந்தேன். பயணத்திட்டப்படி அங்கிருந்து சென்னைக்கு விமானப்பயணம். அப்போது மார்ச் பிறந்து விட்டிருந்தது.
பொதுவாக வெளிநாடு சென்று வெறுங்கையுடன் திரும்புவதில்லை. பரிசுப் பொருட்களுக்கென எப்படியும் ஒன்றிரண்டு பைகள் உருவாகிவிடும். யாழ்ப்பாணத்தை விட்டு கிளம்பும் பொழுது வாங்கிய புளுக்கு ஒடியல், பனம் மிட்டாய், காய வைத்த பனங்கிழங்கு, சிப்ஸ் என பனைசார் தீனிகளுக்கு ஒரு சிறிய பை சேர்ந்தது. முல்லைத்தீவு சென்று திரும்பும் வழியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஆயத்த சட்டைகள், இரவுடுப்புகள் என ஒரு பை உருவானது.
பின் யாழ்ப்பாணத்திலிருந்து கிளம்பி கொழும்பு வரும் வழியில் கண்டி செட்டியார் தெருவில் தரமான தேயிலைத்தூள், அங்கிருந்து கதிர்காமம் செல்லும் வழியில் சுருள் பட்டையும் கார மிளகும் 100 கிராம் என கொஞ்சம் சேர்ந்தது. அடுத்து கொழும்பு நோக்கி பயணம் தொடர்ந்தது.
என் குடும்ப உறுப்பினர்கள், அங்காளி பங்காளிகள், அம்மான் வழியினர், அலுவலக பணியாளர்கள், மூத்த மற்றும் இளைய வழக்குரைஞர்கள், பல்துறை வல்லுநர் பெருமக்கள், காவல்துறை நண்பர்கள், அன்புகெழுமிய நட்பினர், இலக்கிய இன்பர்கள், பதிப்பக தொழில் சார்ந்தோர், ஊடகம் என என் வட்டம் பெரியது. வெளிநாடு செல்லும் பொழுது உடனிருந்து வழியனுப்பி வைத்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு அன்புடன் வந்து நலம் விசாரிப்பவர்களுக்கு என ஏதாவது ஒரு சிறு பரிசையாவது தர வேண்டும் நான் நீண்ட காலமாக பின்பற்றி வரும் கொள்கை. அந்த வகையில் பரிசுக்குரிய பொருளாக நான் கொஞ்சம் அளவு அதிகமாக கண்டியில் வாங்கியது தேயிலைத்தூள். இத்துடன் வேறொன்றையும் பரிசாகத் தந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில், 'ராணி' சோப் வாங்கித்தரலாம் என்றும், கொழும்பு மளிகைக்கடைகளில் கிடைக்கும் என்றும் நண்பர் உடையார்கோயில் குணா கூறினார். மேலும் "அந்த சோப் போட்டுக்குளித்தால் பக்கத்து தெரு வரை வாசம் வீசும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்" என்று உயர்வு நவிழ்ச்சியணியில் வேறு சொன்னார். அப்போர்பட்ட சோப்பை எப்பாடுபட்டாவது வாங்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். வாசனைக்கு மயங்காதவர் யாரும் உண்டோ?
கொழும்பு சென்றடைந்த மறுநாள் காலை சிற்றுண்டி முடித்த கையுடன் கடைவீதி வலம். முதலில் வாங்கியது ராணி சோப்பைத்தான். முகர்ந்து பார்த்தேன். கமகமவென சந்தன சவ்வாது மணம் வந்தது. கடை உரிமையாளர் அருகில் வந்து, "சோப்புடன் தண்ணீர் படப்பட வாசனை இன்னும் அதிகரித்துக் கொண்டே வரும்" என்று சொல்லி அதன் ரேட்டிங்கை மட்டுமல்ல எனது ஆர்வத்தையும் ஏற்றிவிட்டார்.
'அவிங்களுக்கு ரெண்டு, இவிங்களுக்கு நாலு' என மடமடவென மனக்கணக்கிட்டு ஒரு கணிசமான எண்ணிக்கையில் சோப்பை வாங்கிக் கொண்டேன். இரண்டு வித வாசனைகளில் இருந்த அந்த சோப் ஒன்றின் விலை இலங்கைப்பணத்தில் ரூ.65 ஆகும். நமது இந்திய மதிப்பில் சுமார் 25 ரூபா வரும்.
எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு, அன்று மாலை கொழும்பு தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் உலகத்தமிழ் பண்பாட்டியக்கத்தின் தலைவரும், The Associated Newspapers of Ceylon Ltd. (Lake House) செய்திதாள் நிறுவனத்தின் தலைமை ஆசிரியருமான திரு செந்தில் வேலவர், பெருமைக்குரிய முனைவர் சிவலிங்கம் சதீஷ்குமார் உள்ளிட்ட பலரும் பிரியாவிடை கொடுத்து அன்புடன் வழியனுப்ப நான் சென்னைக்கு விமானம் ஏறவும், கொரோனா வைரஸ் உலகளவில் விரட்ட ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. ஏதேனும் காரணங்களால் இன்னும் ஒரு வார காலம் நான் இலங்கையில் இருந்திருந்தால், கடந்த நான்கு தினங்களுக்கு முன் (2/6/2020) கப்பலில் தாயகம் திரும்பிய 713 பேர்களில் நானும் ஒருவனாக வந்து சேர்ந்திருப்பேன். எல்லாம் ஈஸ்வர சித்தம்.
பயணச்சோர்வு நீங்கிய பிறகு, பரிசுப் பொருட்களில் முதலில் அலுவலக பணியாளர்களுக்கு உரியதை பிரித்து விநியோகம் செய்தேன். தொடர்ந்து நான் வந்துவிட்டதை அறிந்து நலம் விசாரிக்க வந்த சிலருக்கு கொடுத்தேன்.
இந்நிலையில் கொரோனா தீநுண்மி நமது நாட்டில் நுழையத் தொடங்க, பாரதப்பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி, "எல்லோரும் அப்படியே அடங்கு" என்று கட்டளையிட மொத்தமும் அப்படியே அடங்கிப்போனது. என்னைப் பார்க்க யாரும் வரவில்லை, நானும் யாரையும் பார்க்கச் செல்ல இயலவில்லை. எனவே கொண்டு வந்த பரிசுப் பொருட்களை அவற்றுக்கு உரியவர்களுக்கு கொடுக்க இயலவில்லை. மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.
இருந்தாலும் ஒரு பெரும் நன்மை விளைந்தது. அதாவது கொரோனா கிருமி தொற்றாமல் இருக்க நாம் நமது கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவிக் கொள்ள வேண்டும் என்று நமது அரசும், முதலமைச்சரும் அடிக்கொருதரம் சொல்லச்சொல்ல, கொண்டு வந்திருந்த ராணி சோப் முழுவதும் மெல்லமெல்ல கரைய ஆரம்பித்து, நேற்று தீர்ந்தே போனது. சுமார் 2 1/2 மாத காலமாக வீட்டிலேயே இருந்த காரணத்தால், அடிக்கடி பைந்தேனீர் (கிரீன் டீ) சாப்பிடுகிறேன் பேர்வழி என்று கண்டி தேயிலையும் காலியானது.
"உங்க ஆத்தை கிராஸ் பண்ணி போறச்சே கமகமன்னு சந்தன வாசனை வருதே... என்ன ஊதுபத்தி வாங்கறேள் வக்கீல் சார் ?" என்று நீண்ட நாட்கள் கழித்து தனது தினசரி காலை நடைப்பயணத்தை தொடங்கி இருக்கும் அய்யராத்து மாமி நேற்று முன்தினம்தான் கேட்டார்கள். "அது ஒண்ணுமில்லை மாமி... எல்லாம் ராணியோட வாசனை" என்று சொன்னவுடன், மாமி தன் முன் நெற்றியை சுருக்கிக்கொண்டு "ராணியோட வாசனையா ....? என்ன சொல்றேள்...?" என்றார். நான் சற்று சுதாரித்துக் கொண்டு "அது ராணி சோப் வாசனை மாமி..." என்று சொல்லி விளக்கி இலங்கை சென்றிருந்த போது வாங்கிய விவரங்களைச் சொன்னேன். உடனே அவர், "இவ்வளவு வாசனையை இருக்கு... நோக்கு ஒன்னுரெண்டு கொடுக்கப்படாதா....?" என்று ஒரு உரிமையுடன் கேட்டார். "கை கழுவிக்கழுவி தீர்ந்துடுது மாமி... மறுக்கா ஸ்ரீலங்கா போவேன்... அப்போ வாங்கி வர்றேன்..." என்று சொன்னேன். இந்த பதிலைக் கேட்டு மாமி கிளம்பி விட்டார். ஆனால் நடையில் ஒரு தொய்வு தெரிந்தது. அது "கொரோனா எப்போ குறையறது....? இவர் எப்போ இலங்கை போறது...?" என்பதைக் காட்டாமல் காட்டியது.