ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்காக சனிக்கிழமைகளில் கூட்டமாகக்கூடுவதை தவிர்க்கவும்

Posted by Admin July 06, 2020

இன்றைய நாளிதழ்களில் நேற்று "இது வாங்க.. அது வாங்க..." என்று கடை வீதிகளில் அலை மோதிய மக்கள் கூட்டத்தைப் பற்றிய செய்திகள்தாம் நிறைய இருந்தன. வாரம் முழுக்க கட்டிக்காப்பாற்றிய "கொரோனா ஒழுக்கத்தை" (?!) ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கிற்காக சனிக்கிழமையன்று கோட்டை விட்டுவிடுவதா? மக்களைத்திரள வைத்தால் கொரோனாவுக்கு கொண்டாட்டம் என்பது பாலபாடமானதொரு விடயம்.. சில தளர்வுகளுடன் வாரம் முழுக்க நீடிக்கும் கட்டுப்பாடுகளால் குறைந்து (!) கொண்டே வரும் தொற்றுப்பரவலை ஞாயிற்றுக்கிழமைக்காக சனிக்கிழமையன்று அதிகப்படுத்திக்கொள்வதா? வளைத்துவளைத்து எவ்வாறு சொன்னாலும் நம் மக்களும் கேட்பதாக இல்லை. இப்படி இருந்தால் கொரோனாவிலிருந்து மீள்வது எப்படி?

தமிழ் கூறும் நல்லுலக அன்பு சகோதர, சகோதரிகளே....
உரிய பணிவடக்கத்துடன் கூடிய
உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன் வைக்கின்றேன்....
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கிற்காக சனிக்கிழமையன்று கூட்டங்கூட்டமாக கடைவீதி உலா செல்வதை அறவே தவிருங்கள்.

தோழர்களே.... சற்றே சுதாரித்துக்கொள்ளுங்கள்...
இன்னும் எத்தனை காலம்தான் இப்படி வீட்டுக்கைதியாக வாழ்வது?
முழுமையாக விடுதலை பெற வேண்டாமா?
அதற்குச் சிறிதளவேனும் நன்னடத்தை தேவையன்றோ?

சிந்தித்துப் பாரீர்....
நாம் அனைவரும் சாமானியர்களா?
இல்லை, சாதிக்கப்பிறந்தவர்கள்.....
நமது அன்றாட இயல்பு வாழ்க்கை ஒருபுறம் நிலைகுலைந்தாலும், நமது தொழில்கள், பணிகள், வணிகங்கள், கல்வி மற்றும் சமூக முன்னேற்றங்கள் என பிழைப்பையும் தொடர்ந்து முடக்கத்திற்கு ஆளாக்கலாமா? ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கேள்விக்குறியாக்கலாமா? இவை சீராக இருந்தால் மட்டுமே வாழ்வியல் நிலை உயரும், பாதுகாப்பாகச் செல்லும் என்பதை உங்களுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் பரஸ்பரம் உண்டு என்பதை நாம் யாரும் மறந்து விடலாகாது. அரசு அப்போதைக்கப்போது சொல்லும் ஊரடங்கு, ஊரடங்கிற்குள் ஊரடங்கு, பின் தளர்வு, அதன் மீது கட்டுப்பாடு, முழு ஊரடங்கு, லாக் ஓபன் ஆகிய விதம்விதமான பதங்களை விட, நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் "சுய ஒழுக்கமும் கண்டிப்பான கட்டுப்பாடுகளும்"-தாம் இனி நம்மை வழி நடத்தும்! நம்மைச் சுற்றி உள்ளோரையும் வாழவைக்கும்!!

எனவே என்னன்புத் தோழமைகளே, தமிழக மக்களே...
சிந்திப்பீர்.. விழிப்புடன் செயல்படுவீர்...

100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கை
கடந்த நிலையிலும் சற்றும் மாறாத
அதே நம்பிக்கையில் என்றும் அன்புடன்,

- பி.ஆர்.ஜெயராஜன்,
வழக்குரைஞர், சட்ட நூலாசிரியர்,
சட்டக்கல்வியாளர் மற்றும்
யதார்த்தக்கவிஞர்.