கஞ்சமலை சித்தர் கோவில் அற்புதங்கள் ! - சொந்த அனுபவங்களுடன் விளக்குகிறார் வழக்குரைஞர் ஜெயராஜன் !!

Posted by Admin November 17, 2020
ஓம் சித்தேஸ்வரன் திருவடி சரணம் !
 
சேலத்திலிருந்து 20 கிலோமீட்டரில் இளம்பிள்ளை செல்லும் வழியில், கஞ்சமலையில் அமைந்துள்ளது '#சித்தர்_கோவில்'
 
 
இக்கோவில் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ளதாக கூறப்படுகிறதே தவிர, அதற்கு சான்று பகர வரலாற்றுக்குறிப்பு ஏதும் இல்லை. ஆனால் இந்த கோவிலுக்கு அகத்திய மகரிஷி அவ்வப்போது வந்துபோகிறார் என்றும், குறிப்பாக அமாவாசை பவுர்ணமி நாட்களில் நடு இரவில் இந்த சித்தேஸ்வர பெருமானை தரிசனம் செய்கிறார் என்றும் அனுபவபூர்வமாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த மலையில் சித்தர்கள் பலரும் தோன்றி மறைவது வாடிக்கை. தான் விரும்பியவர்களுக்கு சித்தர்கள் காட்சி தருவார்களாம்.
 
 
 
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் திரு. #காளிதாசன். ஆன்மிகத்திலும் பக்தி மார்க்கத்திலும் குறிப்பாக சித்தர்கள் வழிபாட்டிலும் தீவிர நாட்டமுடையவர். அவர் "#இயங்கு_ஆற்றல் #சக்தி_யோகம்" (#Kinetic_Energy_Yoga - KEY) என்ற நூலை எழுதினார்.
 
அதன் எழுத்துப்பிரதிகளை அவர் தரத்தர அவற்றை விரைவாக தட்டச்சு செய்து, அவரது திருத்தத்திற்கு நான் தர வேண்டும். இதை ஒரு தெய்வீக பணியாக ஏற்று நான் மட்டுமே செய்து புத்தகமாக வெளியிட்டுக் கொடுக்க வேண்டும் என்று பணித்தார்.
 
எனது தந்தையின் அலுவலகத்தில் ஆங்கில தட்டச்சு இயந்திரம் இருந்த காரணத்தால் நான் அதில் மெல்லப்பழகி தட்டச்சு செய்ய 8-ஆம் வகுப்பிலிருந்தே கற்றிருந்தேன். தந்தையின் மறைவின் போது (1985) நான் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் அத்தட்டச்சு இயந்திரத்தை என் தந்தையின் இளவல்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து அவர்களுக்கு அளித்துவிட்டேன்.
 
கல்லூரி முடிந்து சட்டத்தொழிலில் நுழைந்த 1990-ல் நான் முதலில் வாங்கியது ஆங்கில தட்டச்சு இயந்திரம்தான். பிறகு உடனடியாக மின்னியக்க தட்டச்சு இயந்திரம் வாங்கினேன். தொடர்ந்து அதிவேக கணினியும், அச்செடுக்கும் இயந்திரமும். 1999-ஆம் ஆண்டு வாக்கில் தமிழில் கணினியில் வேகமாக தட்டச்சு செய்யப் பழகிக்கொண்டேன். பிறகு நீதிமன்ற தமிழ் வாதுரைகள், புத்தகங்கள் எதையும் கையில் எழுதி வெளியில் தட்டச்சுக்கு கொடுப்பதை மெல்ல நிறுத்திக்கொண்டேன்; நேரடியாக நானே தட்டச்சு செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டேன்.
 
இந்நிலையில் இங்கு நீதிபதி அய்யா எழுதிக் கொடுத்த பக்கங்களோ அதிகம். இடையில் நிறைய படங்களை வேறு சேர்க்க வேண்டும். இதற்கு எனக்கு அவர் கொடுத்த காலமோ 1 வாரம் மட்டுமே. நான் கூடுதலாக ஒரு வார அவகாசம் கேட்டேன். ஆனால் நீதிபதியோ, "செய்யத்தொடங்குகள், எல்லாம் சித்தர்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று ஒற்றை வரியில் மட்டும் கூறினார். நீதிமன்ற வழக்குக் கட்டுகளில் என் துல்லியமான சட்டத்தமிழ் வாதுரைகளை வாசித்து மெச்சிய நீதிபதி என்னைப் பணிக்கிறார் என்பது பெருமையாக இருந்தது. ஆகவே எனக்கு வேறு பதில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
 
நான் சித்தர்களை பார்த்தவன் அல்ல, ஆனால் மாண்பமை நீதிபதியோ சித்தர்களுடன் உரையாடுமளவு வல்லமை பெற்றவர் என்பதும், சித்தசக்தி நிரம்பியவர் என்பதும் அச்சமயத்திலிருந்த நீதிமன்ற ஊழியர்கள் பலரும் அறிவர். பார்ப்பதற்கே தீட்சண்யம் மிக்க பக்திப்பிரவாகமாக அவரது தோற்றம் அமைந்திருக்கும். பல சமயங்களில் நான் விநாயகரைப் போல. எனவே அவரையே சித்தராக ஏற்று, அவரிட்ட பணியை அவரது காலில் சகலங்கமாக விழுந்து வணங்கி ஏற்றுக்கொண்டேன்.
 
"சித்தர் பாடல்கள்" எனும் தடித்த நூலை எனது தந்தையாரின் நூலகத்திலிருந்து ஒரு ஆன்ம துணைக்காக தேடி எடுத்து வைத்துக்கொண்டேன். என் தந்தையுமொரு சித்தரைப் போலத்தான் வாழ்ந்தவர்.என் தந்தை வழக்குரைஞர் திரு. ரங்காச்சாரி அவர்களையும், என்னைப் பணித்த மாண்பமை நீதிபதி திரு.காளிதாசன் அவர்களையும் சித்தர்களாக மனதில் வணங்கி, தட்டச்சு பணியைத் தொடங்கினேன். எங்கிருந்துதான் எனக்கு அவ்வளவு ஆற்றல் வந்தது என்று தெரியவில்லை. கணினி விசைப்பலகையில் எனது விரல்கள் 'பளிஞ்சடுகுடு சடுகுடு'-வென இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் விளையாடின. கணினி மேஜை 'டகடக'-வென' அதிர்ந்து கொண்டிருந்தது. இரவுபகல் பாரா இடைவிடா பணியால் என் தனியறையே தகித்தது.
 
தட்டச்சு செய்ததை வன்பிரதியெடுத்துத் தர, அதை நீதிபதியவர்கள் திருத்தித்தர 5 நாட்களில் தட்டச்சுப்பணியே முடிந்துபோனது. சில பத்திகள் நீக்கம், சில பத்திகள் சேர்ப்பு தவிர எழுத்துப்பிழைகள் ஏதுமில்லை. நான் வியந்தேன். ஆனால் நீதிபதி வியக்கவில்லை. "உனக்கு சித்தர்கள் துணையிருப்பார்கள்" என்று அவர் பணியின் தொடக்கத்தில் ஆசிர்வாதமாகச் சொன்னது மட்டும் அப்போது 'அசரீரி'-யாக ஒலித்தது.
 
மறுதோன்றி (Offset) அச்சடிப்பு முடிந்து 7-ஆம் நாளில் புத்தகமே தயாராகிவிட்டது. அதனை "#சித்தர்கள் #அருள்ஞான #திருச்சபை" வெளியிட்டது.
 
மாண்பமை நீதிபதி காளிதாசன் அய்யா அவர்கள் சேலத்தில் பணியாற்றிய போது ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மாலை வேளையில் சித்தர் கோவில் சென்று வழிபட்டு அங்கு ஆழ்நிலை தியானத்தை மேற்கொள்வது வழக்கம்.
 
அவருடன் புத்தகப் பணிக்காக பழகிய காலத்தில் எனக்கு அவர் "#Clairvoyance" எனப்படும் #தொலைவிலுணரும் (ஞானதிருஷ்டி) ஆற்றலை உணர வைத்தார். நமது உடலில் இயங்கு ஆற்றலாக (Kinetic Energy) மின்சாரம் உள்ளது என்பதை மெய்ப்பிக்க, நான் அமர்ந்திருந்த இருக்கையில் எனது கால்கள் இரண்டையும் தரையில் படாமல் மேலே தூக்கி வைத்துக்கொள்ளச் சொல்லியும், என் எதிரில் மற்றொருவரை நிற்க வைத்து அவரது ஆட்காட்டி விரல் என் நெற்றிக்கு நேராக ஒரு அங்குல இடைவெளியில் தள்ளி இருக்கும்படி காட்ட வைத்தும், நீதிபதி அவர்கள் என் பின்னால் வந்து நின்று தனது மேல் துண்டால் மயிலிறகால் தடவுவதுபோல் என் முதுகின் மீது பட்டும்படாமலும் தடவினார். அவ்வளவுதான் என் நெற்றியிலிருந்து சிறியதொரு தீப்பொறி வெளிப்பட்டு எதிரில் நின்றிருந்தவரின் விரல் நுனிக்கு பாய்ந்தது. அவரோ, "சார்.. ஷாக்கடிக்குது" என்று சொல்லி தன் விரலை படக்கென எடுத்துக் கொண்டார். அந்தக்காலகட்டத்தில் நான் விபூதி, குங்குமத்துடன் சந்தன பொட்டையும் சேர்த்து வைத்திருப்பேன். காய்ந்து நன்கு ஒட்டிக்கொண்டிருந்த அச்சந்தன பொட்டு, நெற்றியிலிருந்து பொத்துக் கொண்டு வெளிப்பட்ட மின்சாரத்தால், பொலபொலவென மடியில் உதிர்ந்து விழுந்துவிட்டது. இப்படி நிறைய...
 
"குருவருளின்றி திருவருளில்லை; குருவே சரணம்" எனத்தொடங்கும் அந்நூலிலிருந்து இயங்கு ஆற்றல் சக்தி யோகத்தைப் பற்றியும், உடற்சக்கர இயக்கங்களால் ஒவ்வொரு மனிதரிடத்திலிருந்தும் வெளிப்படும் 'ஆரா' எனப்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஒளிச்சக்தி பற்றியும், எதிர்மறையாளர்களின் சக்தி நம்மை பாதிக்கா வண்ணம் பார்த்துக் கொள்வது எப்படி என்பதையும் அறிந்து கொண்டதை நான் என் பாக்கியமாக கருதுகிறேன்.
 
சேலத்திலிருந்து பணி மாறுதலாகி புதுச்சேரி மாவட்ட நீதிபதியான பிறகு, நான் அவரைப்பற்றி நீதிமன்ற வட்டாரத்தில் நலம் விசாரிப்பது மட்டும் உண்டு. இன்று இந்தக்கட்டுரையின் ஊடே அவருடனான நினைவுகளை, மெய்சிலிர்த்துணர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, இணையத்தமிழுலக எழுத்தாவணமாக பதிந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
 
சித்தர் கோவிலுக்கென பல மகத்துவங்கள் உண்டு. கோவிலைத் தாண்டி பின்புறம் பல கிணறுகள் உள்ளன. இவற்றில் பகதர்கள் நீர் சேந்திக்குளிப்பது வாடிக்கை. தோலில் கரும்புள்ளிகள், நாள்பட்ட மருக்கள் ஏதும் இருப்பின் அதை இந்தக் கிணற்று நீரில் ஒன்பது அமாவாசை நாளில் குளித்தால் சரியாகும் என்பது ஐதீகம் மட்டுமல்ல பலரின் அனுபவமும் கூட. இராமேஸ்வரம் போல இங்கு அமைந்திருக்கும் கிணறுகளின் நீர் ஒவ்வொன்றும் ஒரு சுவை தரும். இந்தக்கிணற்று நீரை பலரும் இரு கைகளிலும் அள்ளிப்பிடித்து அல்லது வாளி நிறைய வைத்துக்கொண்டு, அதில் தங்கள் கண்கள் இரண்டையும் திறந்தவாறு இயன்ற அளவு காட்டி எடுப்பதைக்காணலாம். இதற்கு கண் குளிர்ச்சி பெற்று, பார்வை தீர்க்கமாகும் என்று சொல்லப்படுகிறது.இந்தக்கிணறுகளில் நீர் சேந்தி பக்தர்கள் குளிக்ககுளிக்க நீர் ஊறிக்கொண்டே இருக்கும்.
 
இந்த கோவிலின் மலை உச்சிக்கு பவுணர்மி நாளில் பக்தர்கள் சென்று இரவில் அங்கு தியானத்தில் ஈடுபடுவது வாடிக்கை. மலை உச்சியில் தியானமேடை போல ஒரு இடம் உள்ளது. இரவில் பல இடங்களினூடே 'விசுவிசு'-வென நுழைந்து வந்து அந்த இடத்தில் வீசும் காற்று, 'ஓம்' எனும் ஒலியோடு வெளியாகும். அந்த அனுபவம் கேட்டுணர்வதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும்..
 
அந்த இடத்திற்கு அருகில்தான் அவ்வைப்பிராட்டி கருநெல்லி மரத்திலிருந்து 12 வருடங்களுக்கு ஒருமுறை காய்க்கும் கருநெல்லியை பறித்துச் சென்று தகடூரை ஆண்ட மன்னன் அதியமானுக்கு தந்தாக வரலாறு....
 
அமாவாசை நாளில் இங்கு வந்து கிணறுகளில் நீர் சேந்தி குளித்துவிட்டு, உப்பு மிளகு படைத்து சித்தேஸ்வரனை வணங்குவது இறை வரத்துடன் இயற்கை சக்தியையும் உடலுக்கும் உள்ளத்திற்கும் தரும்.
 
இத்தனை சக்திவாய்ந்த இந்த சித்தர் கோவிலை சேலம் வந்து செல்லும் நண்பர்கள் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து இங்குள்ள இன்னொரு சிறிய குன்றின் மேல் கோவில் கொண்டுள்ள குமரக்கடவுளையும் தரிசனம் செய்வது மிகச்சிறப்பு.
 
 
என் தந்தை உயிருடன் இருந்த போது 1980 முதல் 1984 வரை என் தந்தையுடன் நான் அமாவாசை தவறாமல் இந்தக்கோவிலுக்குச் சென்று, அக்கிணறுகளில் நீராடி சித்தேஸ்வரனை வணங்கி வந்துள்ளேன் என்பது நான் இங்கு கூடுதலாகப் பகிர்ந்து கொள்ளும் சேதி.
 
"இப்படி ஒரு கட்டுரை எழுதுக" என்று மாண்பமை நீதிபதி திரு. காளிதாசன் ஆணையிடுவதாக என் மனதில் எனக்கு நேற்றிரவு (11/11/2020) முதல் தோன்றியதால், இதை எழுதியுள்ளேன்.
 
நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட
குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று
அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க!⁠
 
- பி.ஆர்.ஜெயராஜன்