ரயில் புறப்படும் போது கீழிறங்கி அடிபட்டு மரணமடைந்தால் இழப்பீடு கிடையாதா? ரயில்வே தீர்ப்பாயம், உயர் நீதிமன்றம் மற்றும் ரயில்வே சட்டம் என்ன சொல்கிறது ? - வழக்குரைஞர் பி.ஆர்.ஜெ. விளக்குகின்றார் -

Posted by Admin November 21, 2023

தான் தவறான தொடர் வண்டியில் ஏறிவிட்டோம் என்று அறிந்த பயணி ஒருவர், புறப்பட்டுக் கொண்டிருந்த அவ்வண்டியிலிருந்து அவசரமாக கீழிறங்க முற்பட்டார். அப்போது தவறி கீழே விழுந்து அவருக்கு காயங்கள் ஏற்பட்டு, அதனால் அவர் மரணமடைந்துவிட்டார்.

இதற்கு இழப்பீடு கோரி தொடர் வண்டி நிர்வாகத்தின் (இந்திய ஒன்றியம்) மீது தொடுக்கப்பட்ட வழக்கில், பயணியின் செயல், தொடர்வண்டிச் சட்டம் பிரிவு 124A-இன் வரம்புரை வாசகத்தின் விதிவிதிவிலக்கில் கூறப்பட்டுள்ள (Exception to the proviso to Secton 124A) "தானேதனக்கு ஏற்படுத்திக் கொண்ட காயம்" (Self inflicted injury) என்பதன் கீழ் வரும் என்றும், தொடர் வண்டியில் இருந்து கீழே விழுந்து தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட காயத்தால் மரணமடைந்த பயணிக்கு இழப்பீடு வழங்க இயலாது என்றும் கூறி எர்ணாகுளம், தொடர்வண்டி கோருரிமை தீர்ப்பாயம் மனுவை தள்ளுபடி செய்து ஆணையிட்டது.

இதை எதிர்த்து கேரளா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், அப்பயணி தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அதனால் மரணமடைய வேண்டும் என்ற நோக்கில் நகர்ந்து கொண்டிருந்த தொடர் வண்டியிலிருந்து இறங்க முற்படவில்லை என்றும், தவறான வண்டியில் ஏறிவிட்டோமே, அதிலிருந்து கீழிறங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் இறங்குகையில் தவறி விழுந்துள்ளார் என்றும், இது தொடர்வண்டிச் சட்டம் பிரிவு 123(சி)-இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளள "அசம்பாவிதமான சம்பவம்" (Untoward Incident) என்பதன் ஆளுகைக்குள் வரரத்தக்கது என்றும், எனவே அவரைச் சார்ந்திருந்த மனுதாரர்கள் தொடர்வண்டிச் சட்டம் பிரிவு 124A-இன்படி இழப்பீடு பெற உரிமையுடையவர்கள் என்றும் அவதானித்தது.

முடிவில் தொடர்வண்டி விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் (இழப்பீடு) விதிகள், 1990-இன் பின்னிணைப்புப்பட்டியலில் [As per the Schedule The Railway Accidents and Untoward Incidents (Compensation) Rules 1990] இறப்பிற்கான இழப்பீடாக வகை செய்யப்பட்டுள்ள ரூ. 8,00,000/-த்தையும் அதற்கு 6 விழுக்காடு வட்டியையும் மனுதாரர்கள் பெற அருகதையுடையவர்கள் என்றும், அதை எதிர்மனுதார் (இந்திய ஒன்றியம்) இரண்டு மாதங்களுக்குள் வைப்பீடு செய்ய வேண்டும் என்றும் மாண்பமை நீதியரசர் சி.பிரதீப் குமார் ஆணை பிறப்பித்து, மனுவை முடித்து வைத்தார் |

©️ பி.ஆர்.ஜெயராஜன் | 2023

வழக்குத்தலைப்பு:
Malarkodi P Vs. Union of India
வழக்கு எண் :
MFA (RCT) No. 141 of 2017

முன்னிலை:
மாண்பமை நீதியரசர் சி.பிரதீப்குமார்
தீர்ப்புத்தேதி : 17/11/2023

மேற்கோள்:
2023 LiveLaw (Ker.) 669

 

Accidental Fall Of Passenger While Trying To Alight From Wrong Train Amounts To 'Untoward Incident': Kerala High Court Orders Compensation

https://www.livelaw.in/high-court/kerala-high-court/kerala-high-court-accidental-falling-passenger-getting-down-moving-wrong-train-untoward-incident-not-self-inflicted-injury-242620