சட்டப்படிப்பை படித்து முடித்த கையுடன் நீதிபதி தேர்வெழுத அனுமதிப்பது என்பது எந்த அளவிற்கு சரியாக வரும்? நீதிபதி தேர்வெழுத நீதிமன்றங்களில் வழக்குரைஞராக தொழிலாற்றிய அனுபவம் வேண்டாமா?

Posted by Admin February 21, 2024

அண்மையில் வெளியான உரிமையியல் நீதிபதிகளுக்கான (சிவில் ஜட்ஜ்) தேர்வு முடிவில், 30 வயதுக்கும் கீழே உள்ள பலர் தேர்வாகி உள்ளார்கள் என்பதையும், அவர்களில் பலர் நீதிமன்றத்திற்கு வராமல், நீதிமன்ற அனுபவம் ஏதும் இல்லாமல், படிப்பை முடித்தவுடன் பயிற்சி மையத்திற்கு சென்று தேர்வுக்காக மட்டுமே படித்து தேர்வாகி உள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது. அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் அதே நேரத்தில், பின்வரும் இரண்டு ஆதங்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியதும் இங்கு அவசியமாக உள்ளது.

சட்டப்படிப்பை படித்து முடித்த கையுடன் நீதிபதி தேர்வெழுத அனுமதிப்பது என்பது எந்த அளவிற்கு சரியாக வரும்? நீதிபதி தேர்வெழுத நீதிமன்றங்களில் வழக்குரைஞராக தொழிலாற்றிய அனுபவம் வேண்டாமா?

நீதிபதி பணி என்பது, ஏதோ ஒரு அலுவலகத்தில் பணியில் அமர்ந்து ஒரு இளநிலை உதவியாளர் (ஜூனியர் அசிஸ்டென்ட்) செய்யும் பணி போன்றதல்ல.

கீழமை நீதிமன்றங்களை விசாரணை நீதிமன்றங்கள் என்று அழைக்க வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் கூறியது. அந்த வகையில் விசாரணை நீதிமன்றங்களில் பதவி ஏற்கும் இந்த உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் வழக்கின் விசாரணைக்கு முழுதளவில் பொறுப்புடையவர்களாக இருக்கின்றார்கள். மேல்முறையீட்டு நிலையில் சாட்சிகளின் விசாரணை கிடையாது. விசாரணை நீதிமன்றத்தில் சாட்சிகள் கொடுத்த வாக்குமூலங்களும், குறியிடப்பட்ட சான்றாவணங்களும் மேலமை நீதிமன்றங்களில் சட்டத்தின் துணையோடு அலசி ஆராயப்படுகின்றன. எனவே ஒரு வழக்கின் விசாரணை எந்த அளவிற்கு வழக்கெழு வினா / குற்றச்சாட்டை ஒட்டி நடைபெற வேண்டும், எது வரை அனுமதிக்கலாம் என்பதெல்லாம் அந்த விசாரணை நீதிமன்ற நீதிபதி/நடுவரின் ஆளுகைக்குள் உள்ள சட்ட விடயங்கள் ஆகும்.

வேறு வகையில் சொன்னால் தன்முன்னே வரும் வழக்கில், இருதரப்பு வாதுரைகள், மெய்ப்பிக்கும் சுமை, அது ஆரம்பத்தில் யாரிடம் உள்ளது; பின் யார் மீது எதற்காக மாறுகிறது, வழக்குச் சங்கதிகளின் தொடர்புடைமை, குறியிடப்பட்ட சான்றாவணங்களின் சட்ட நிலைப்பாடு, சாட்சியங்களின் நம்பகத்தன்மை, வல்லுநர்களின் கருத்துரை, சுட்டக்காட்டப்படும் முந்தைய தீர்ப்பு நெறிகள் எந்த அளவிற்கு பொருந்துகின்றன, இவற்றையெல்லாம் தன் அறிவு கொண்டும், தன் அனுபவம் கொண்டும் சிந்தித்து அவ்வழக்கில் ஒரு நீதிபதி/நடுவர் தீர்ப்பளித்தல் வேண்டும். அதுவே சிறந்த தீர்ப்பாகவும், உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் சிறந்த நிவாரணமாகவும் அமையும்.

அதாவது படிப்பறிவோடு பட்டறிவும் வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படும் கருத்து. அப்போதுதான் தேர்ந்த தீர்ப்பை வழங்க முடியும்.

காரணம், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் 80 விழுக்காடு உள்ள நம் நாட்டில், விசாரணை நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கோ, உச்ச நீதிமன்றத்திற்கோ சென்று அத்தகு மக்களால் பரிகாரம் தேட முடிவதில்லை. அப்படி சென்றாலும், நிலுவையில் உள்ள 5 கோடிக்கும் மேலான வழக்குகளில் அவர்களது வழக்கும் ஒன்றாகிப் போகும்.

எனவே, கீழேயுள்ள விசாரணை நீதிமன்ற அளவிலேயே அவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டுமெனில், உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது வழக்குரைஞராக சட்டத் தொழிலாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பதை ஒரு தகுதியாக்கினால், அது உள்ளபடியாக மேலும் தகுதியானவர்கள், "விசாரணை நீதிமன்றங்கள்" எனப்படும் அடிப்படை நீதிமுறை மன்றத்தில் நீதிபதி ஆவதற்கு வழிவகுக்கும்.

- பி.ஆர்.ஜெயராஜன்
வழக்குரைஞர்.