திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடியதற்காக மணமுறிவு கோர முடியாது; கணவனின் மனு தள்ளுபடி - பம்பாய் உயர் நீதிமன்றம். -

Posted by Admin June 24, 2024
 
கல்யாணம் என்றாலே சந்தோசம். இது கல்யாணத்திற்கு பிறகு இரட்டிப்பு ஆவது இயல்பான ஒன்று. சந்தோசம் அதிகமான என்ன ஆகும்...? உடம்பு ஒரு சுத்து பெருசாகும்.கொஞ்சம் வெயிட் போட ஆரம்பிக்கும். அதாவது இதுக்கு 'பூரிப்பு'-ன்னு பேரு.
 
ஆனா, "பொண்ணு பாக்கபோறப்போ ஸ்லிம்மா அழகா இருந்தாவ.... கல்யாணத்துக்கு பின்னாடி இப்படி குண்டா ஆய்ட்டாளே... பாக்க சகிக்கலை...., தெய்வமே நான் என்ன பண்ணுவேன் " என்று மாப்பிள்ளை வேதனைப்பட்டு 'டிவோர்ஸ்' கேட்டாக்க அந்தப் பொண்ணோட மனசு எவ்வளவு வேதனைப்படும்? நீங்களே சொல்லுங்க...!
 
இப்படிதான் ஒரு வழக்கில் நடந்துவிட்டது. ஆனால் இங்கு சங்கதிகள் கொஞ்சம் மாறுபட்டவை. சற்று நெருடலானவையும் கூட. அதாவது திருமணத்திற்கு முன் மனைவி தனது மார்பகத்தில் ஒரு அறுவை செய்து கொண்டிருந்தார். இது பற்றி கணவனுக்கு தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடந்து விட்டது. சில காலங்களுக்குள் மனைவியின் உடல் எடை கூட ஆரம்பித்தது.
 
திருமணத்திற்கு முந்திய மார்பக அறுவைக்கும், திருமணத்திற்கு பிந்திய உடல் எடை கூடலுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி, அந்த அறுவை காரணமாக திருமணத்திற்கு பிறகு தனது மனைவியின் உடல் பெருத்து விட்டது என்று கணவன் சாட்டுரைத்தார். அதே நேரம் இப்படி உடல் பெருத்துப் போனதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியும், மனைவி கேட்க மறுக்கிறாள் என்று மற்றொரு குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தார். இதனால், இயல்பான இல்லற சுகத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும், தான் எதிர்பார்த்த மாதிரி தனது மனைவி நடந்து கொள்ள மறுக்கின்றாள் என்றும், தானே வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய வேண்டியுள்ளது என்றும், எனவே தனக்கு மணமுறிவு வேண்டும் என்றும் கணவன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
ஒரு பாடலில் 'மானே... தேனே..." என்ற வார்த்தைகளை எப்படி பொருத்தமான இடங்களில் சேர்க்க வேண்டுமோ அப்படி மணமுறிவு கோரும் மனுக்களில் 'கொடுமை' (குருயல்டி) பற்றி எடுத்துரைக்க அன்றாட வாழ்வியியல் பிரச்சனைகள் சிலவற்றை பூதாகரமாக்கி எழுதுவது வழக்கம். அப்படி சிலவற்றை கணவன் கூறி அவை யாவும் தனக்கு மனைவி இழைத்து வரும் கொடுமைகள் ஆகும் என்றும், அதன் அடிப்படையிலும் தனக்கு மணமுறிவு வேண்டும் என்றும் வாதுரைத்தார்.
 
ஆனால் இவரது மனுவை குடும்ப நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மணமுறிவு வழங்கவில்லை. எனவே, இவர் இதை எதிர்த்து பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை கேட்டறிந்த மாண்பமை நீதியரசர் எம்.எஸ்.சோனக் மற்றும் நீதியரசர் ஏ.எஸ்.ஒகா அடங்கிய ஆயம், கணவன் மனைவி இருவருக்கும் இடையே உடல் தொடர்பு ஏற்பட்டு திருமண உறவை இருவரும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதையும், அதே நேரத்தில் இருவருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான பாலியல் உறவு இல்லை என்று கணவன் கூறும் சாட்டுரையை மெய்ப்பிக்க ஆதாரங்கள் ஏதும் கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதையும் கண்டறிந்தது. இவை எல்லாம் கொடுமைகள் ஆகாது என்றும், திருமணதிற்கு பின்னிட்டு உடல் எடை கூடுவதை காரணமாக காட்டி மணமுறிவு கோருவது நிலைக்கத்தக்கதல்ல என்றும் நிலை நிறுத்தியது.
 
மேலும், இவ்வழக்கில் கணவன் மனைவி இருவரும் நீண்ட நெடுங் காலம் பிரிந்து வாழ்வதால், இவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு சுமூகத் தீர்வை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஒன்றையும் உயர் நீதிமன்றம் கொடுத்தது. ஆனால் அதை இருவரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. முடிவில் மணமுறிவு கோரும் கணவனின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆணையிட்டது.
 
இங்கு மற்றொரு சட்ட நிலைப்பாட்டையும் உயர் நீதிமன்றம் எடுத்துரைத்தது. அதாவது கணவனும் மனைவியும் நீண்ட நெடுங்காலம் பிரிந்து வாழ்கின்றனர். எனவே அவர்களுக்கிடையிலான திருமண பந்தம் மீண்டும் சேர்ந்து செல்ல முடியாத அளவிற்கு பழுதாகி விட்டது (Irretrievable breakdown of marriage) என்று எடுத்துக் கொண்டாலும், அதன் அடிப்படையில் கூட மணமுறிவு வழங்க முடியாது என்றும், அது மணமுறிவு வழங்குவதற்கு ஒரு அடிப்படை ஆகாது என்றும் தெளிவுபடுத்தியது.
 
(The Court also stated that even assuming that there is an irretrievable breakdown of marriage, under Section 13 of the said Act, the break down of the marriage is no ground to grant a decree of divorce. Unless one of the grounds set out in Sub­section (1) of Section 13 of the said Act is established, a decree of divorce cannot be passed.)
 
Milind Anant Palse vs. Mrs. Yojana Miland Palse | Family Court Appeal No. 106 of 2005 | Bombay High Court | Judgment dated 10 Feb. 2014
 
எனினும் ஒரு திருமண பந்தம் திரும்ப சேர முடியாத அளவு பழுதாகிவிட்டது (Irretrievable breakdown of marriage) என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் மணமுறிவு வழங்கலாம். அதாவது உச்ச நீதிமன்றம் தன் முன் உள்ள வழக்கு விடயம் ஒன்றில் முழுநிறைவான நீதி வழங்குதற் பொருட்டு தனக்கு இந்திய அரசியலமைப்பு உறுபு 142 வழங்கியுள்ள பேரதிகாரத்தை பயன்படுத்தி (By the utilization of the plenary powers under Article 142, the court can do anything in the name of complete justice), மேற்சொன்ன அடிப்படையின் கீழ் மணமுறிவு வழங்கலாம். அண்மையில் பின்வரும் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அவ்வாறு மணமுறிவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
DR. Nirmal Singh Panesar versus MRS. Paramjit Kaur Panesar @ Ajinder Kaur Panesar | CIVIL APPEAL NO. 2045 OF 2011 | 10 October 2023 | Citation : 2023 LiveLaw (SC) 873

Constitution of India, 1950; Article 142 – Decree of divorce - Irretrievable break down of marriage - Supreme Court can depart from the procedure as well as the
substantive laws, and exercise its discretion under Article 142 for dissolving the marriage between the parties by balancing out the equities between the  conflicting claims of the parties, however, such discretion should be exercised with great care and caution. This discretionary power could be exercised for dissolving the marriage on the ground of its irretrievable break down to do “complete justice,” though one of the spouses opposes the prayer for dissolution of marriage. (Para 17, Followed: Shilpa Sailesh v. Varun Sreenivasan, 2023 INSC 468 (Constitution Bench)
 
- By P.R.Jayarajan, Advocate