தமிழ்நாடு வரலாறும் பண்பாடும் என்ற இந்நூலை பண்டைக்காலம், இடைக்காலம், நவீன காலம், தற்காலம் என 4 தொகுதிகளில் எழுகியுள்ளார் வரலாற்று ஆசிரியரும், பேராசிரியருமான திரு க.வெங்கடேசன்.
இந்நூலின் முதல் தொகுதி பண்டைக்கால தமிழ்நாடு பற்றியது. இத்தொகுதியில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
(1) சங்ககாலத் தமிழ்நாட்டு வரலாறு,
(2) வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ்நாடு,
(3) சங்க கால இலக்கியம்.
இவற்றில், பழைய கற்கால, சங்ககால தமிழ்நாடு, கீழடி அகழாய்வு, சோழர், பாண்டியர், மதுரை சுல்தான்கள், விஜயநகரம் ஆகிய பேரரசுகளின் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றினையும், பண்பாட்டின் பல பரிமாணங்களையும் விரிவாக எழுதியுள்ள ஆசிரியர் வெங்கடேசன், இவர்களது ஆட்சி, எழுச்சி, வீழ்ச்சி பற்றியும் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
இரண்டாம் தொகுதியான இடைக்கால தமிழ்நாடு என்ற நூல் மொத்தம் எட்டு பகுதிகளைக் கொண்டது. அவை,
(1) களப்பிரர்கள் தமிழ்நாடு,
(2) பல்லவர் காலத் தமிழ்நாடு,
(3) பாண்டியர் காலத் தமிழ்நாடு - I,
(4) சோழர்காலத் தமிழ்நாடு,
(5) பாண்டியர்காலத் தமிழ்நாடு II
(6) மதுரை சுல்தான்கள் காலத் தமிழ்நாடு,
(7) விஜயநகர ஆட்சிகாலத் தமிழ்நாடு மற்றும்
(8) நாயக்கர் ஆட்சிக்காலத் தமிழ்நாடு.
இந்த எட்டுப்பகுதிகளிலும் பண்பாடு, இலக்கியம், பொருளாதார நிலை, சமுதாய நிலை, சமய நிலை, கல்வி நிலை, கவின் கலைகள், வாழ்வியல் முறை, மன்னர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் என நூலாசிரியர் விளக்கியுள்ளார். அத்துடன் இப்பகுதிகளை திறனாய்வு செய்தும் எழுதியுள்ளார்.
இந்நூலின் மூன்றாம் தொகுதி நவீன கால தமிழ்நாடு பற்றியது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை
(1) நவீன காலத் தமிழ்நாட்டு வரலாறு,
(2) நவீனகாலப் போர்கள் - தமிழ்நாட்டில் ஆதிக்கப் போட்டி மற்றும்
(3) இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகம்.
இந்த முப்பகுதிகளிலும் தமிழ்நாட்டின் நவீனகாலம், சென்னையில் ஆங்கியலேயர், பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக்காரர், கர்நாடகத்தில் நவாபுகள், கர்நாடக போர்கள், ஆங்கிலேயரின் வெற்றிக்கான காரணங்கள், தமிழ்நாடும் மைசூர் போர்களும், ஆங்கியலேயரும் ஆர்க்காட்டு நவாபுகளும், பாளையக்காரர் கிளர்ச்சி, தென்னிந்திய கிளர்ச்சி, வேலூர் கிளர்ச்சி, கம்பெனி தமிழ்நாட்டைக் கைப்பற்றுதல் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிகள் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் ஆசிரியர் வெங்கடேசன் அணுகியுள்ளது சிறப்பு. மேலும் சமூக சீர்திருத்த இயக்கங்கள், வள்ளலாரின் சீர்திருத்த இயக்கம், இந்து சமய சீர்திருத்த இயக்கம் ஆகியவை பற்றியும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, நீதிக்கட்சியின் தோற்றம், ஆட்சி, சுயமரியாதை இயக்கம், சி.ராஜகோபாலாச்சாரி ஆட்சி ஆகிய திருப்புமுனை நிகழ்ச்சிகள், அவற்றின் வரலாற்று சிறப்புகளும் இந்த மூன்றாம் தொகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது.
நிறைவாக வரும் நான்காம் தொகுதி தற்கால தமிழ்நாடு பற்றியது. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை ராஜதானியின் பிரகாசம் ஆட்சிக்காலம் தொடங்கி, இந்தியா அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த போது ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் சென்னை ராஜதானியின் முதல் முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து பி.எஸ்.குமாரசாமி ராஜா முதல் தற்போது எடப்பாடி கே.பழனிசாமி வரை முதலமைச்சராக இருந்து வரும் தமிழக ஆட்சியில் அவர்களது சாதனைகள், முக்கியத் திட்டங்கள், சந்தித்த சோதனைகள், எதிர்கொண்ட இடர்பாடுகள் - சவால்கள், அவற்றிற்கான தீர்வுகள் என நீண்ட நெடிய கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் அண்மைக்கால ஆட்சிச் செய்திகளை நூலின் இந்த நான்காம் தொகுதியில் நிறையவே காணலாம்.
மைய ஆட்சிப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும் இந்நூல்கள் ஓர் வரப்பிரசாதம் என்றால் அது மிகையன்று. மூன்று மாதங்களில் மூன்று பதிப்புகளில் இந்நூல் வெளி வந்துள்ளது என்ற ஒரு தகவல் மட்டுமே இதன் பரந்த பயன்பாட்டை பறை சாற்றுவதாகும்.
Varthamanan, Venkatesan, VC, 4 Volumes
Good