புவிப்புறவியல், காலநிலையியல், பேராழியியல், உயிரியற்புவியியல், குடியிருப்புப் புவியியல், மக்கட்பரப்பியல் என ஆறு நூல்களைத் தொடர்ந்து வர்த்தமானன் பதிப்பகம் ஏழாவது நூலாக இந்த "சுற்றுப்புறச் சூழல் புவியியல்" எனும் நூலை எளிய தமிழில் பாங்குடன் வெளியிட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் இளம் சமுதாயத்தினரின் தேவைகளை மனதில் கொண்டும், இள நிலை மற்றும் முது நிலை அறிவியல் பட்டப்படிப்பில் புவியியலை முதன்மைப் பாடமாகத் தெரிவு செய்து கற்று வரும் மாணவர்கட்கு பயன் தரும் வகையிலும், புவியியல் கற்பிக்கும் பணியில் மெத்த அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் முனைவர் கி.குமாரசாமி மற்றும் இ.சி.காமராஜ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள அறிவார்ந்த படைப்புதான் இந்த "சுற்றுப்புறச் சூழல் புவியியல்" எனும் அற்புத நூலாகும்.
விலங்கெனத் திரிந்த மனிதன் நாகரிகமும் வளர்ச்சியும் பெற்று மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கிய காலகட்டத்தில் தோன்றிய பல்வேறு புரட்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியன அவனுக்கு அந்தந்த காலத்திற்குரிய வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்த்தன. எனினும் மனித வாழ்க்கை என்பது காலத்தின் போக்கில் எந்திரகதியாக மாறியது. எதிலும் வேகம், எதுவும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற மனப்பான்மை அனைவருக்கும் தொற்றிக்கொண்டது. விளைவு, இன்றைய மனித வாழ்க்கை முறை இயற்கைக்கு எதிரான ஒன்றாக மாறிவிட்டது. மனிதன் தனது செயல்களால் இயற்கைக்கு தீங்கு விளைவித்தான்; அது இன்று அவனுக்கு தீங்கு விளைவித்து வருகின்றது. அதில் முதலிடம் வகிப்பது சுற்றுப்புறச்சூழலும், அது மனித செயல்களால் மாசடைந்து, அந்த மாசுக்கள் திரும்ப மனித சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதும் ஆகும். சுற்றுச்சூழல் மாசடைவதை முற்றிலும் தடுத்து நிறுத்த இயலவில்லை. அந்த மாசுடனேயே மனிதன் வாழ்கின்றான் அல்லது தன்னை தற்காத்து வாழ்கின்றான். எனவே இன்றைய மனித சமுதாயம் தனது சுற்றுப்புறத்தில் மகிழ்ச்சியாக உள்ளதா என்ற கேள்விக்கு 'உள்ளது' என்று சட்டென பதில் அளித்து விட இயலாது. நாம் இந்த புவியில் எந்த இடத்தில் வசித்தாலும், அந்த இடத்தின் சுற்றுப்புற சூழல் நமது வாழ்க்கை முறையை ஆளுகை செய்கின்றது அல்லது வழிநடாத்துகின்றது எனலாம். காரணம் சுற்றுப்புற சூழல் என்பது அந்தந்த இடத்தை பொறுத்து மாறுபடுவதாகும். இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
மேற்சென்ற விவரங்களை மையமாகக் கொண்டு இந்த நூல் சுற்றுப்புறச்சூழல் புவியியலை படிப்படியாக பின்வரும் அத்தியாயங்களின் கீழ் விளக்குகின்றது.
1. சுற்றுப்புறச் சூழ்நிலைப் புவியியல் : புவியியல்சார் அறிமுகம்
2. சுற்றுப்புறச்சூழல்
3. மனிதன் - சுற்றுப்புறச்சூழல் தொடர்புகள்
4. சூழலியல்
5. சூழல் தொகுப்பு
6. சூழல் தொகுப்பு வகைகள்
7. உயிரிக்குழுமங்கள்
8. உயிரியற் பல்வகைமை அல்லது உயிரின வளம்
9. இயற்கை வளங்கள்
10. இயற்கை பேரழிவுகள் / இயற்கைப்பேரிடர்கள்
11. சுற்றுப்புறசூழ்நிலை மாசடைதல்
12. இந்தியாவில் சுற்றுப்புறச்சூழல் இயக்கங்கள்
13. சுற்றுப்புறச்சூழ்நிலை மேலாண்மை
14. பேணத்தகு முன்னேற்றம் / நிலைத்த முன்னேற்றம் / ஊறுபடா முன்னேற்றம்
15. சுற்றுப்புறச்சூழல் கல்வி
16. நிறைவாக
பிற்சேர்க்கை
I. கோவிட் 19 பெருந்தொற்று
II . கொங்கு மண்டலம் சார்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்
III. புலனுணர்வு, மனப்பான்மை, மதிப்பு மற்றும் உணர்ச்சிக்கோட்பாடு
IV. பொதுச்சொத்தின் துயரக் கோட்பாடு
V. Agenda - 21
Reference Books
போட்டித்தேர்வர்கள், புவியியல் மாணாக்கர்கள் மட்டுமல்லாது, அனைவரும் வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய விரிவான நூல். இப்போது சலுகை விலையில் கிடைக்கின்றது
நூல் மதிப்பாய்வு : திருமிகு. பி.ஆர்.ஜெயராஜன், வழக்குரைஞர் மற்றும் சட்ட நூலாசிரியர்.