"வரலாறு தெரியும், புவியியல் தெரியும்... ஆனால் இது என்ன 'மக்கட்பரப்பியல்' (Human Geography) ? இதற்கு முன் நாம் கேள்விப்பட்டிராத நூல் தலைப்பாக உள்ளதே..!" என்று எண்ணி நீங்கள் வியந்தால் அதில் வியப்பில்லை. ஆனால் இதற்கான விளக்கத்தை நீங்கள் அறிந்தால் இந்த வியப்பு தானாக அடங்கி, இப்பாடத்துறை துறை பற்றிய தெளிந்த அறிவு கிடைக்கும்.
அதாவது மக்கட் பரப்பியல் என்பது மனிதனைப்பற்றியும், அவன் வாழும், வளரும் சூழ்நிலை பற்றியும், குறிப்பாக அவை இரண்டிற்கும் இடையே உள்ள நெருக்கமான தொடர்பு பற்றியும் நுணுக்கமாக விரித்துரைக்கின்றது. வேறு வகையில் சொன்னால், மனிதனுக்கும் புவியியற் கூறுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய முற்படும் இயலே மக்கட்பரப்பியல் ஆகும்.
ஆதியில் காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன், மெல்லமெல்ல நாகரிகம் பெற்று தனக்கென ஒரு சமுதாயத்தை படைத்து ஓரிடத்தில் நிலையாக கூட்டமாக வாழ ஆரம்பித்தான். நிலப்பரப்பின் மீது ஆதிக்கம், ஆட்சி, அரசியல், வேளாண்மை, தொழில் என படிப்படியாக மனிதன் முன்னேறி, கல்வியறிவு பெறல் என்பதில் உயர்வு பெற்று, அதன் விளைபலனாக இன்று அவன் கண்டுபிடித்து உலகிற்கு தந்த, தந்து கொண்டிருக்கின்ற கண்டுபிடிப்புகள் எண்ணிலடங்கா. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம். ஆம்... நாம் தற்போது தகவல் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வளர்ந்து வந்த தகவல் தொடர்பின் அடிப்படையில் "காலம் பின்வாங்கியது; விண்வெளி மறைந்தது" (Time has ceased and space has vanished) என்று 60 ஆண்டுகளுக்கு முன் அறிஞர் மார்ஷல் மெக்லுஹான் ( Marshall McLuhan) கூறிய கருத்து இன்று மெல்ல உண்மையாகிப் போனது. ஆம்... இன்று மனிதன் காலத்தையும் விஞ்சி பயணிக்கின்றான்; விண்வெளியையும் தன்வெளியாக்கிக் கொண்டான். இவ்வாறு மின்னணு தொழில் நுட்பம் இப்பேரண்டத்தை சுருக்கிவிட்டது என்று கூறும் கனடா நாட்டு அறிஞர் மார்ஷல், இந்த உலகை மக்கள் மிக நெருக்கமாக வாழும் ஒரு கிராமம் என்று பொருள்படும் வகையில் முதன்முதலாக "உலகளாவிய கிராமம்" (Global Village) என்று சொற்களைப் பயன்படுத்தி அவ்விதம் குறிப்பிடுகின்றார். இது பல்வேறு விதமான தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டினால் புவியானது ஒரு கிராமமாகச் சுருக்கப்பட்டதை உருவகிக்கும் ஒரு சொற்றொடர் ஆகும். உலகளாவிய கிராமம் என்பது உலகளாவிய அளவில் பருப்பொருளியலுக்கும் சமூகவியலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக இணையதளம் மூலமாக செய்திகளை வெகு எளிதாக உலகம் முழுவதும் பரவச் செய்து உலகில் உள்ள மக்கள் ஒரு சிறிய கிராமத்தில் இருப்பதை போல மிகவும் எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு இன்று இருக்கும் புவிப்பரப்பு முழுவதிலும் மக்கள் தங்களை பலவாறு நெருக்கமாக, விரைவாக தொடர்பு கொண்டு வியாபித்து வாழ்கின்றனர் என்றால் அது மிகையன்று.
இந்த விடயங்களை மையமாகக் கொண்டு சுழலும் இந்த நூல், மக்கட்பரப்பியலை திறம்பட பல்வேறு அத்தியாயங்களின் வழியாக எடுத்துரைக்கின்றது.
புவிப்புறவியல், காலநிலையியல், பேராழியியல், உயிரியற்புவியியல், குடியிருப்புப் புவியியல், சுற்றுப்புறச் சூழல் புவியியல், மக்கட்தொகை புவியியல் என புவியியல் தொடர்பாக பல நூல்களை வெளியிட்ட வர்த்தமானன் பதிப்பகம் இந்த "மக்கட்பரப்பியல்" எனும் நூலையும் எளிய தமிழில் பாங்குடன் வெளியிட்டுள்ளது.
குடிமைப்பணிசார் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் இளம் சமுதாயத்தினரின் தேவைகளை மனதில் கொண்டும், இள நிலை மற்றும் முது நிலை அறிவியல் பட்டப்படிப்பில் புவியியலை முதன்மைப் பாடமாகத் தெரிவு செய்து கற்று வரும் மாணவர்கட்கு பயன் தரும் வகையிலும், புவியியல் கற்பிக்கும் பணியில் மெத்த அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் முனைவர் கி.குமாரசாமி மற்றும் இ.சி.காமராஜ் ஆகியோர் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர்.
இந்த நூலில் மொத்தம் 33 அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. அவை வருமாறு,-
1. மக்கட்பரப்பியல் - ஓர் அறிமுகம்
2. புவியியல் அணுமுறையில் இரட்டைப்போக்கு மற்றும் இருபிரிவுக் கொள்கைகள்
3. இயற்கை முடிவுக் கொள்கை மற்றும் தேர்வு முதன்மைக் கொள்கை
4. மனிதனின் பரிணாம வளர்ச்சி
5. மனித இனங்கள்
6. பண்பாட்டுக் கூறுகளின் பரிணாமம்
7. உலக மொழிகள்
8. உலக மதங்கள்
9. பண்பாடும் நாகரிகமும்
10. பண்பாட்டுத் தொட்டில்கள், பண்பாட்டு தோற்றுவாய்கள்
11. பண்பாட்டு பிரதேசங்கள்
12. வாழ்க்கை முறை
13. பிக்மிப் பழங்குடியினர்
14. சென் என்கின்ற புதர் மனிதர்கள்
15. இனுயிட்ஸ் என்கின்ற எஸ்கிமோக்கள்
16. செவ்விந்தியர்கள்
17. தூந்திரப் பிரதேச மக்கள் அல்லது பழங்குடியினர்
18. ஆஸ்திரேலியப் பூர்வீகக் குடியினர்
19. மத்திய ஆசிய கிர்கிஸ் நாடோடிகள்
20. மசாய்ப் பழங்குடியினர்
21. பெடாவின்கள் / பெடுவின்கள்
22. இந்தியாவின் பழங்குடிச் சமுதாயத்தினர்கள்
23. நீலகிரி மலையில் தோடர்கள்
24. கோண்டு பழங்குடியினர்
25. சந்தால்கள்
26. வடகிழக்கு இந்திய நாகர்கள்
27. காசி பழங்குடியினர்
28. தராய் வாழ் தாரஸ் மக்கள்
29. போட்டியா பழங்குடியினர்
30. குஜ்ஜார்கள்
31. பில் பழங்குடியினர்
32. அந்தமான், நிக்கோபார் தீவுகள் பழங்குடியினர்
33. மனித வள மேம்பாடு
மேற்கோள் நூல்கள்
கலைச்சொற்கள்
மொத்தத்தில் மாந்தர் அனைவரும் வாசித்து தெரிந்து கொள்ளவேண்டிய நன்னூல்.
நூல் மதிப்பாய்வு : பி.ஆர்.ஜெயராஜன், வழக்குரைஞர் மற்றும் சட்டத்தமிழாய்வு அறிஞர், சேலம்.