நுண்ணினப் பொருளியல் என்பது பொருளாதாரத்தின் ஒரு பகுதியை - அதாவது தனிமனிதர்களின் அல்லது சிலரின் பொருளாதார நடவடிக்கைகளையும், தனித்தனி இல்லங்களையும், தொழில் நிறுவனங்களையும், தனிப் பொருட்களின் விலை நிர்ணயம் போன்றவற்றையும் ஆராய்கின்றது. பொருளாதார நடவடிக்கைகளில் ஏதாவது ஒண்றினைப்பற்றி, அதற்கான காரண காரியங்களைப் பற்றி தனித்து ஆராய்கின்றது. வேறு வகையில் சொன்னால், மொத்த பொருளாதாரத்தின் ஒவ்வொரு பகுதியையும் நுணுகி, அப்பகுதியின் நோக்கில் தனித்தனியாகப் பிரித்து ஆராய்வதை நுண்ணினப் பொருளியல் என்கின்றோம்.
பொருளியியல் என்று எங்கெல்லாம் உச்சரிக்கப்படுகின்றதோ அல்லது பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஒரு பொருளியல் மாணவருக்கு பேராசிரியர் டாக்டர் மா.பா.குருசாமியும் அவர் எழுதிய பொருளியல்சார் புத்தகங்களும் கண்டிப்பாக நினைவுக்கு வரும். பொருளியல் பாடம் என்பதை ஆங்கில வழியில்தான் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றிருந்த நிலையில், டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் பொருளியலை தமிழில் விளக்கி எழுதிய புத்தகங்கள் பல இன்றும் பயன்தரத்தக்கதாக உள்ளன என்று சொன்னால் அதில் மிகை ஏதுமில்லை. அந்த வகையில் நுண்ணினப் பொருளியியலை நூலாசிரியர் இரண்டு பாகங்களாக படைத்துள்ளார்.
முதல் பாகம் பொருளியலின் இலக்கணம் தொடங்கி, அது பிற சமூக அறிவியலுடன் தொடர்பு கொண்டுள்ளது, அது விரவி நிற்கும் ஆளுகை அளவு எவ்வளவு, பொருளியல் முறைகள் என்னென்ன, பொருளியல் விதிகள், நுகர்வு, பயன்பாடு, தேவையும் அதன் விதியும், சமநோக்கு வளைகோடுகள், உற்பத்தி, நிலமும் விளைவு விதிகளும், உழைப்பும் மக்கள் தொகை கோட்பாடுகளும், முதல், அமைப்பு, வேலைபகுப்பு, தொழிலை இடப்படுத்துதல், அளிப்பு, உற்பத்தி செலவு, சம அளவு உற்பத்தி வளைகோடும், சம செலவு கோடும் முடிய பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர் அய்யா அவர்கள் மாதிரி கேள்விகளுடன் விளக்குகின்றார். பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்பார்கள். அதன் அடிப்படையில் ஒரு தனிமனிதன் பொருள் (பணம்) தேடுதலும், அதை வைத்துக்கொண்டு செலவு செய்து தனது வாழ்வை நடத்துவதும், இதற்கிடையில் தோன்றும் பல்வேறு நுணுக்கமான பொருளியல் பிணைப்புகளும் அவற்றை விளக்கும் விதிகளும் நுண்ணின பொருளியல் ஆகின்றது. அவற்றை எல்லாம் இந்த முதல் பாகம் தெளிவுற மேற்படி தலைப்புகளின் வாயிலாக எடுத்துரைக்கின்றது.
நுண்ணின பொருளியலின் இரண்டாம் பாகத்தில் ஒரு தனி மனிதனின் பொருளியல் தேவைகள் மற்றும் விருப்பங்கள் எவ்வாறு அளவிடப்படுகின்றன, எவ்வாறு பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதை அங்காடி (சந்தை), விலை நிர்ணயம், வருவாய் வளைகோடுகள், நிறைவு போட்டி, முற்றுரிமை, நிறைகுறை போட்டி, இருமுக முற்றுரிமை, பிரதிநிதித்துவ நிறுவனமும் உத்தம அளவு நிறுவனமும், ஊக வணிகம், பகிர்வு, வாரம், கூலி, வட்டி, இலாபம் ஆகிய தலைப்புகளில் அண்மையில் இறைவனடி சேர்ந்த பேராசிரியர் திரு. மா.பா.குருசாமி விளக்கியுள்ளார்.
பொருளியல் கல்வி கற்போருக்கு பன்னெடுங்காலமாக பயன் தரும் நூல்கள் இவை. தமிழில் பொருளியல் கல்வி என்ற பாடப்பொருளை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கி நிற்கும் கல்தூண்கள் இவை. ஆம் இந்த இரண்டு பாகங்களின் முதற்பதிப்பு 1971-ஆம் ஆண்டில் வெளிவந்தவை ஆகும். தற்போது 29-ஆம் பதிப்பில் விற்பனை ஆகி வருகின்றது, அதுவும் குறைந்த விலையில்.
பொருளியல் மாணவர்களுக்கு முனைவர் ம.பா.குருசாமி அவர்கள் தந்துவிட்டு சென்ற வரப்பிரசாதம் இந்த இரண்டு நூல்களும்.
Gurusamy, Micro Economics, sarvodaiya