போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் இளம் சமுதாயத்தினரின் தேவைகளை மனதில் கொண்டும், இள நிலை மற்றும் முது நிலை அறிவியல் பட்டப்படிப்பில் புவியியலை முதன்மைப் பாடமாகத் தெரிவு செய்து கற்று வரும் மாணவர்கட்கு பயன் தரும் வகையிலும், புவியியல் கற்பிக்கும் பணியில் மெத்த அனுபவம் பெற்ற பேராசிரியர்கள் முனைவர் கி.குமாரசாமி மற்றும் இ.சி.காமராஜ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள அறிவார்ந்த படைப்புதான் இந்த "மக்கட்தொகை புவியியல்" எனும் அற்புத நூலாகும்.
புவிப்புறவியல், காலநிலையியல், பேராழியியல், உயிரியற்புவியியல், குடியிருப்புப் புவியியல், மக்கட்பரப்பியல், சுற்றுப்புறச் சூழல் புவியியல் என ஏழு நூல்களைத் தொடர்ந்து வர்த்தமானன் பதிப்பகம் எட்டாவது நூலக இந்த "மக்கட்தொகை புவியியல்" எனும் நூலை எளிய தமிழில் பாங்குடன் வெளியிட்டுள்ளது.
விலங்கெனத் திரிந்த மனிதன் நாகரிகமும் வளர்ச்சியும் பெற்று மெல்ல மெல்ல முன்னேறத் தொடங்கிய காலகட்டத்தில் தோன்றிய பல்வேறு புரட்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியன அவனுக்கு அந்தந்த காலத்திற்குரிய வளங்களையும், நலன்களையும் கொண்டு வந்து சேர்த்தது. மக்கள் சமுதாயத்தின் வளர்ச்சி என்பது மக்கட்தொகை பெருக்கத்திற்கு வழிவகுக்கும். "ஒரு நாட்டின் நாகரிக வரலாற்றை அங்குள்ள மண்ணின் வரலாறு கூறும் என்றும், மனிதனின் கற்றலறிவு மண்ணிலிருந்து தொடங்குகிறது என்றும்" அறிஞர் வில்காக்ஸ் முன்வைக்கும் கூற்றுக்கேற்றவாறு மண் வளம் நிறைந்த பகுதியில் வேளாண் உற்பத்தி அமோகமாக வளர்ந்தது. மக்கள் அந்தப் பகுதியில் குழுமி வாழ ஆரம்பித்தனர். வளமான மண் விரிந்த பூமி, மக்களின் வாழிடத்தை பரவலாக்கிக்கொண்டே சென்றது. மேலும் திரைகடல் ஓடியும் மக்கள் திரவியம் தேடத் தொடங்கினர். இது மக்கள் வாழிட மற்றும் தொழிலிட பெயர்ச்சியை அதிகரித்தது. இவ்வாறு மக்கள் தொகை பெருக்கம், இடப்பரவல், இடபெயர்ச்சிக்கு எண்ணற்ற காரணிகள் உள்ளன.
இவற்றின் அடிப்படையில் கற்கும் இயல்தான் மக்கட்தொகை புவியியல் என்று சொன்னால் அது மிகையன்று. சுருங்கக்கூறின் புவிப்பரப்பில் பரவியுள்ள மக்களின் இடப்பரவல் வேறுபாட்டிற்குரிய காரணிகள், விளைவுகள் ஆகியவற்றை விளக்கும் இயலே மக்கட்தொகை புவியியல் ஆகும். இவ்வகையான இடப்பரவல் வேறுபாடுகள் மக்களின் இயல்பு, கலாச்சாரம் மற்றும் சமூக பொருளாதார பின்புலங்களை எவ்வாறு தம்பால் உள்ளீடு செய்து தாக்கத்தை தோற்றுவிக்கின்றன எனது தெளிவாக விளக்குவதே மக்கட்தொகை புவியியலின் நோக்கமாகும். உற்பத்தித் திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் மக்கள், சமுதாயத்தின் வலிமையான மக்கள் வளங்கள் (Human Resources) எனப்படுகின்றனர். இவர்கள்தாம், பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக வளர்ச்சிக்கும் அடித்தளமாகத் திகழ்பவர்கள். அதுபோல் அறிவாற்றல் வாயிலாக வளங்களைப் பயனுடைய பொருட்களாக மாற்றும் திறனைப் பெற்றவர்களும் இவர்களே.
மக்கட்தொகை புவியியலை இவ்வாறு செம்மையாக விளக்கும் இந்நூல், உள்ளபடியாக போட்டித் தேர்வர்கள் மற்றும் புவியியல் மாணாக்கர்களுக்கு ஓர் கலங்கரை விளக்கம் என்று சொன்னால் அது மிகையன்று. அவர்கள் மட்டுமல்லாது, இந்நூலை சமூக மாந்தர் ஒவ்வொருவரும் வாசித்தால், அவர்கள் வாழ்ந்த, வாழுகின்ற மற்றும் வாழவேண்டிய காலத்திற்கு இது பொருள் கூறும் ஓர் அகராதியாக விளங்கும் என்பது திண்ணம்.
நூல் மதிப்பாய்வு : பி.ஆர்.ஜெயராஜன், வழக்குரைஞர், தமிழக அரசு விருது பெற்ற சட்ட நூலாசிரியர் மற்றும் சட்டத்தமிழாய்வு அறிஞர் www.shripathirajanpublishers.com
இந்நூலின் பொருளடக்கம் பின்வருமாறு
1. மக்கட்தொகை புவியியல் : ஓர் அறிமுகம்
2. மக்கட்தொகைத் தரவுகள்
3. மக்கட்தொகைப் பரவல்
4. பிறப்பு வீதம்
5. இறப்பு வீதமும் வாழ்நாட் காலமும்
6. மக்களிடப் பெயர்ச்சி
7. உலக மக்கட்தொகை வளர்ச்சி
8. மக்கட்தொகைக் கட்டமைப்பு
9. மக்கட்தொகையும் வளங்களும்
10. மக்கட்தொகையும் பொருளாதார முன்னேற்றமும்
11. மக்கட்தொகை கொள்கைகள்
12. மக்கட்தொகையும் திட்டமிடலும்
13. மக்கட்தொகை கோட்பாடுகள்
14. மக்கட்தொகையும் சுற்றுப்புற சூழ்நிலை நெருக்கடிகளும்
15. மக்கட்தொகை பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள்
16. மக்கட்தொகை கல்வி
17. மக்கட்தொகை கணிப்புகள்
மேற்கோள் நூல்கள்