இந்திய காவற்பணியில் தகுதி காண் பயிற்சிப்பருவத்தில் உள்ளோர் (Indian Police Service Probationers) , நேரடி நியமனம் பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் (Directly recruited Deputy Superintendents of Police), நேரடி நியமனம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் (Directly recruited Sub Inspectors of Police) ஆகியோர்களுக்கு முறையே தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் (போலீஸ் அகாடெமி) நடத்தும் இறுதி தேர்வுகளுக்கு பயன் தரும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் - தொகுதி I -க்கான பாடத்திட்டத்தில் குறிக்கப்பெற்றுள்ள அனைத்து பகுதிகளும் இந்நூலில் வினா - விடைகளாகவும் மற்றும் சிறு குறிப்பு வரைக வினாக்களாகவும் தரப்பட்டுள்ளன. இவை முந்தைய தேர்வுகளில் வினவப்பட்டதாகும். மேலும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படாத சில பகுதிகளில் இருந்தும் தேர்வுகளின் போது வினாக்கள் கேட்கப்படுகின்றன. அவற்றுக்கும் இந்நூலில் விடைகள் தரப்பட்டுள்ளன. அத்துடன் நிலை ஆணைகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் மற்றும் செருகல்களும் இதில் தரப்பட்டுள்ளன.
இந்நூல் மேற்கண்டவாறு தேர்வு எழுதும் காவல் அலுவலர்களுக்கு மட்டுமல்லாது, காவல் நிலையங்களை ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக வருகை தரும் களப்பணி காவல் அலுவலர்களுக்கும் (Field Officers), அது போல காவல் நிலையங்களில் அன்றாட பணிகளை வழக்கமாக மேற்கொள்ளும் நிலைய உள்ளிருப்பு அலுவலர்களுக்கும் (Station House Officers) பயன் தரக்கூடியது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது.
பணி நிறைவு பெற்ற காவல்துறை கூடுதல் துணை ஆணையர் திரு எஸ்.முருகானந்தம் அவர்கள் மிக்க சிரத்தையுடன் எழுதியுள்ள இந்நூல், காவல் துறை சார்ந்த அனைத்து பிரிவினருக்கும் தங்கள் பணிகளில் வழிகாட்டும் மற்றும் உயர வைக்கும் ஓர் விரிவான கையேடு என்று சொன்னால் அது மிகையன்று.