அரசியலமைப்பு சட்டம் - II (அரசியலமைப்பு அங்கங்களின் கட்டமைப்பு மற்றும் மத்திய - மாநில உறவுகள்)
நமது நாட்டின் மேன்மையான மற்றும் அடிப்படையான சட்டம் "இந்திய அரசியலமைப்பு சட்டம்" ஆகும். இது நமது நாட்டின் நிர்வாகம், சட்டமியற்றுதல், நீதி வழங்குதல் ஆகிய மூன்று அங்கங்களின் கட்டமைப்பை (Institutional Structure) எடுத்துரைக்கின்றது. அவற்றிற்கான அதிகாரங்களை தனது பல்வேறு வகைமுறைகள் மூலம் வழங்குகின்றது. மேலும் அவ்வதிகாரங்கள் யாரிடம் இருக்க வேண்டும், அவை எப்படி பயன்படுத்தப்பட வேண்டும், அதன் மீதான வரம்புகள் யாவை என்பனவற்றையெல்லாம் அரசியலமைப்பு சட்டம் கூறி நெறிப்படுத்துகிறது. தொடர்ந்து இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவர், இந்திய தேர்தல் ஆணையம், அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் அதிகாரங்களையும் பணிகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்துரைக்கின்றது.
இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் இந்தியக் கூட்டாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய - மாநில உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் பல்வேறு உறுபுகள் அல்லது சரத்துகளின் வழியாக நமது அரசியலமைப்பு சட்டம் தெளிவாக வரையறுக்கின்றது. குறிப்பாக சட்டமியற்றுதல் குறித்த உறவுகள் (Legislative Relations), நிர்வாக உறவுகள் (Administrative Relations), நிதி சார் உறவுகள் (Fiscal Relations) என்ற மூன்று பரந்த வகைப்பாட்டின் கீழ் மத்திய-மாநில உறவுகளை திறம்பட எடுத்துரைக்கின்றது .
இச்சட்டம், அத்துடன் வியாபாரம் மற்றும் வணிகத்திற்கான சுதந்திரம் பற்றியும், அரசின் பொறுப்பு நிலை பற்றியும் விரிவாக கூறுகிறது. ஒரு நாட்டில் நெருக்கடி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அவற்றை விரிவாகக் கூறி, அதன் விளைவுகளையும் தெளிவுபடுத்துகின்றது, அரசியலமைப்பு சட்டம். அதுபோல் காலம் மற்றும் தேவைக்கு தகுந்தவாறு சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியது மக்களாட்சியின் அடிப்படை அம்சமாகும். அதற்கு அரசியலமைப்பு சட்டமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் அரசியலமைப்பின் திருத்தம் பற்றி விரிவான வகைமுறைகளை வகுத்துள்ளது இந்திய அரசியலமைப்பு சட்டம்.
மேற்சொன்ன அனைத்து சட்ட நிலைப்பாடுகளையும் இந்த அரிய நூல் விவரிக்கின்றது. இது சிவில் சர்வீஸ் எனப்படும் மைய அரசுப்பணியாளர் தேர்வுகளுக்கும், மாநில அரசு போட்டித் தேர்வுகளுக்கும், சட்டக் கல்லூரி தேர்வுகளுக்கும் பயன் தரத்தக்கது.
SPRP, SLP, PRJ, Shri Pathi Rajan Publishers