13-4-2023 முதல் நடைமுறைக்கு வந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998-ஐ அதன் 2023-ஆம் ஆண்டின் விதிகளுடன் சேர்த்து ஒரு தொகுப்பாக ஒரே நூலில் வெளியிட்டுள்ளது மாலதி பப்ளிகேஷன்ஸ். இதில் 2024-ஆம் ஆண்டு வரையிலான விதிகள் திருத்தங்களுடன் தரப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள் கிராம நிலையிலிருந்து பெருநகரங்கள் வரை அனைத்து அளவிலும் பெரும்பங்கு ஆற்றுகின்றன. கிராமங்கள் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தவரை தமிழ்நாடு பஞ்சாயத்துக்கள் சட்டம், 1994 அமுலில் உள்ளது. தேசிய அளவில் மிக அதிக நகர அமைப்புகளை கொண்டுள்ள தமிழ்நாட்டில் பெருநகர மாநகராட்சியான சென்னைக்கு என தனியே 1919-ம் ஆண்டு சட்டமும், மற்ற பிற மாநகராட்சிகளுக்கு என தனித்தனியே மாநகர சட்டங்களும், இதுதவிர நகராட்சிகளுக்கு (தற்போது நகராட்சி மன்றம்) மற்றும் பேரூராட்சிகளுக்கு என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920-ம் ஏற்கனவே அமுலில் இருந்து வந்தது.
தேசிய அளவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படாமல் இருந்த காரணத்தினால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 74வது திருத்தத்தின் மூலம் நகராட்சிகள் என்கின்ற தலைப்பில் பகுதி IX-A சேர்க்கப்பட்டது. அந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் வரி விதிப்பு அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள், வரி வருவாய் பங்கீட்டு முறைமைகள், முறையான, சரியான நேரத்தில் தேர்தல் நடத்துவதை உறுதியளித்தல், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கென போதுமான வாய்ப்புகளை வழங்குதல் போன்றவை தொடர்பான விஷயங்களை செயல்படுத்தும் நோக்கில் தகுந்த வகையங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மூன்று பெரும்பிரிவுகளாக பிரித்து அவற்றிற்கென தனியே மாநிலங்கள் சட்டங்களை வகுப்பதற்கான நெறிமுறைகளையும் மற்றும் அதுதொடர்பான சிறப்பு வரையறைகளும் முறைமைகளும் அரசியலமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட்டன.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 74வது திருத்தத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 1.8.2000 முதல் அமுலுக்கு வரும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம். 1998-ஐ இயற்றியது. அச்சட்டம் 23.8.2000 முதல் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (செயற்பாட்டினை தற்காலிமாக நிறுத்தி வைத்தல்) சட்டம், 2000-ன் படி நிறுத்தி வைக்கப்பட்டது.தற்போது புதிய திருத்தங்களுடன் 13.4.2023 முதல் 1998 சட்டமானது அமுலுக்கு வந்தது. அதன் கீழான தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023-ம் அதே தேதியில் நடைமுறைக்கு வந்தது.
உள்ளாட்சி அமைப்பு என்பது சமூகத்தின் அடிப்படை அமைப்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூட்டாக ஒரு குறிப்பிடத்தக்க செறிவுடைய மக்கள் கொண்ட ஒரு சமூகத்திற்கென அடிப்படை தேவைகள் அவசியமாகின்றன. அவற்றினை பெறுவதற்கு அந்த மக்கள் நேரடியாக அரசாங்கத்தை அணுகுவதற்கு சிரமங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று ஆகும். அதனால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் உள்ளாட்சி அமைப்பு. ஒவ்வொரு பகுதிக்கும் என ஒரு ஆட்சி அமைப்பு இருக்கும் நிலையில் தேவையான அடிப்படை வசதிகளையும்,அவசியமான பணிகளையும் விரைவாகவும் குறைந்த சிரமங்களுடன் நிறைவேற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து நமது தேசத்தில் குறிப்பாக, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகள் தொடர்பாக பல சட்டங்கள் இருந்தபோதும் அவற்றினை ஒன்றிணைத்து ஒரேசட்டமாக இயற்றுவதினால் மக்களுக்கு சிரமங்கள் குறையும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. நகரம் சார்ந்த ஒரு உள்ளாட்சி அமைப்பினை கருதுகையில், அங்கு அடிப்படை தேவைகளான குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றல் போன்றவற்றிற்கான வரி, சொத்து வரி, கல்வி வரி மேலும் நகர பகுதி என்பதால் அங்கு இருக்கும் நிறுவனங்களுக்கான வரி போன்றவற்றினை வசூலித்தலும் அவற்றை கையாள்வதும், அத்தகைய வரி விகிதங்களை தக்க சமயங்களில் மாற்றி அமைத்தலும் மற்றும் அது சார்ந்த பிற அதிகாரங்களும் அத்தகைய ஒரு பகுதியின் உள்ளாட்சி அமைப்பிற்கு அனுமதிக்கப்படுகிறது. அதுபோக, தொழில் சார்ந்த அமைப்புகளுக்கான உரிமங்களை வழங்குதல் மற்றும் அவற்றினை நிர்வகித்தல் அதற்கான வரிகளை வசூலித்தல், விளம்பர பலகைகள், மின்னணு திரைகளை நிர்வதித்தலுக்கான உள்ளாட்சி நெறிமுறைகளை ஏற்படுத்துதல், கட்டுமானங்களுக்கான அனுமதி உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய பணிகளுக்கான விதிமுறைகள், மேலும் பொது சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை நிர்வகித்தல், மலக்கசடு மேலாண்மை மற்றும் இன்னபிற உள்ளாட்சி அமைப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள அதிகாரங்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் "நகராட்சி" என்ற தலைப்பில் மூன்று அமைப்புகளாக இச்சட்டத்தின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது; அவை (1) மாநகராட்சி, (2) நகராட்சி மன்றம் மற்றும் (3) பேரூராட்சி. இந்த மூன்று வகையான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்கள் ஆட்சி தத்துவத்தின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்துவதன் மூலம் தகுதி வாய்ந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மூலம் சட்டத்தில் சொல்லப்பட்டப்படி முறையான கூட்டங்கள் போன்றவற்றை கூட்டி செயல்முறைகளை, நெறிமுறைகளை வகுத்து அத்தகைய உள்ளாட்சி அமைப்பினை முறையாக நடத்தலாம். இந்தச் சட்டத்தில் அரசு சார்பில் ஆணையருக்கென பெரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கென தேர்தல்களை நடத்துதல், தேர்தல்களில் ஏற்படும் குற்றங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றை இச்சட்டம் மிக தெளிவாக நிறுவி உள்ளது. மேலும் தேர்தல்கள் மூலம் ஏற்படுத்தப்படும் மன்றங்கள், குழுக்கள், தலைவர், மன்ற உறுப்பினர்கள் போன்றவற்றோடு நகர பணியாளர் தொடர்பான விதிகளையும் இச்சட்டம் உள்ளகத்தே வைத்துள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்பு தொடர்பாக நிதியை கையாள்வது மற்றும் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பது போன்ற நிதிசார்ந்த விஷயங்களையும் இச்சட்டம் நிறைவாக கொண்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம், 1978 பொருந்தகூடிய பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மற்ற உள்ளாட்சி அமைப்பு பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளுக்கும் ஒருங்கேயமைந்த ஒரே சட்டத் தொகுப்பாக இந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் விதிகள் 2023 அமுலுக்கு வந்துள்ளது.
கிரவுன் தாள் அளவில் 526 பக்கங்களில் கெட்டி அட்டை கட்டுமானத்துடன் வெளியாகியுள்ளது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
1998 சட்டம் மற்றும் 2023 விதிகளை தமிழாக்கம் செய்கையில் சில சிரமங்கள் இருந்தாலும், வழக்கறிஞர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அங்கு பணிபுரியும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களுக்கும் எளிய வகையில் தாய்மொழியில் சட்டத்தினை கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இப்பணியை போதுமான திருப்தியுடன் தமிழாக்கம் செய்து வெளிக்கொணர முயற்சி செய்து அதில் ஒருவாறு வெற்றியும் கண்டதாக இந்நூலின் ஆசிரியர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
இதன் பொருளடக்கம் வருமாறு
பொதுப் பொருளடக்கம்
1. முன்னுரை
2. பொதுப் பொருளடக்கம்.
3. சட்டம் மற்றும் விதிகளின் திருத்த விவரப்பட்டியல்.
4. கலைச்சொற்கள்.
5. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம். 1998 .....1-120
6. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 .....121-525
சட்ட திருத்தங்கள் - விவரப்பட்டியல்
1. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 54/1999)
2. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 35/2022), 13-04-2023 முதல் அமுலுக்கு வந்தது.
3. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 19/2023), 13-04-2023 முதல் அமுலுக்கு வந்தது.
4. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 24/2024), 15-03-2024 முதல் அமுலுக்கு வந்தது.
5. 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (இரண்டாவது திருத்தம்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 25/2004) பிரிவு 36, உட்பிரிவு (1) மட்டும் 13-04-2023 முதல் அமுலுக்கு வந்துள்ளது. மற்ற பிரிவுகள் இப்பதிப்பு வெளியிட்ட நாள் வரை அமுலுக்கு வரவில்லை.
விதிகள் திருத்தங்கள் - விவரப்பட்டியல்
1. அரசு ஆணை எண். 2, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேதி 12-01=2024
2. அரசு ஆணை எண். 60 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேதி 16-03-2024
3. அரசு ஆணை எண் 62 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேதி 16-03-2024
4. அரசு ஆணை எண். 89 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தேதி 04-07-2024