இந்த நூல் 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறக்கட்டளைகள் சட்ட வகைமுறைகளை எளிய தமிழில் தருகின்றது. சட்டப்பிரிவு ஒவ்வொன்றின் கீழும் அதற்கான விளக்கவுரைகள் மற்றும் வழக்குத் தீர்ப்புரைகளைத் தந்து, அதன் கீழ் எழும் ஐயப்பாடுகளை கேள்விகள் என்ற தலைப்பில் வினவி அவற்றுக்கும் விடை பகிர்ந்துள்ளார் இந்நூலின் ஆசிரியர் திரு கே.சக்திவேல். மேலும் இந்நூலில் திருக்கோவில் பணியாளர்களுக்கான புதிய விதிகள், 2021-ஆம் ஆண்டுக்கான புதிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் சேர்த்துள்ளார் இதன் ஆசிரியர். எல்லாவற்றுக்கும் மேலாக நில விற்பனை, அறங்காவலர்கள்/கோவில் பணியாளர்கள்/செயல் அலுவலர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை, திருக்கோயில்களை அறிவிக்கை செய்தல், சமுதாயக் கோவில் போன்ற முக்கியமான தலைப்புகளுக்கு முன்தீர்ப்பு நெறிகளைச் சுட்டிக்காட்டி பாங்குடன் விளக்கமளித்துள்ளார் திரு சக்திவேல். புனித குளங்கள் பட்டியலை இந்நூலின் இறுதியில் சேர்த்துள்ளார்.
இவ்வாறு இச்சட்டம் தொடர்பாக பலப்பல முக்கிய விவரங்களுடன், அறிவிக்கை ஆணைகளுடன் மற்றும் ஏராளமான தீர்ப்புகளுடன் நமக்கு தந்துள்ள இந்நூலின் ஆசிரியர் திரு. சக்திவேல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் 36 ஆண்டுகள் பணிபுரிந்து, உதவி ஆணையர் நிலையில் பணி நிறைவு பெற்றவர் என்பதும், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தரமான தாளில், எழிலான அச்சுக்கோப்பில், 1317 பக்கங்களில், கெட்டி அட்டை ஏட்டுக்கட்டுமானத்தில் விரிவாக வெளிவந்துள்ள இந்நூல், அறநிலையத் துறை அலுவலர்கள், திருக்கோவில் செயல் அலுவலர்கள், பணியாளர்கள், வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள், தொல்லியியல் மற்றும் தல வரலாற்று ஆய்வாளர்கள், சட்ட மாணவர்கள், போட்டித்தேர்வர்கள் என அனைவருக்கும் பயன் தரக்கூடியது எனலாம்.